Friday, 27 September 2019

அரை குறை

வேல்கம்பும் தீப்பந்தமுமாய்
காடு மலை திரிந்தவன்
கடைசியில் நதிக்கரை வந்தடைந்தான்...

இடம் கண்டவன், தேவைக்காக
கல், மரம், மண், ஏர் தொழில்
செய்து வாழத்தொடங்கி...

ஓர் தொழில் செய்தவன் கூட்டமானான்
அவன் தொழில் அந்த கூட்டத்திற்கு
அடையாளமாகி போனது ...

அவன் தொழில் அறிவும், ஆற்றலும்
வணிகமும் சார்ந்து செல்லாமல்
அரை குறை அறிவாய் சாதியாய் நின்றது..

Tuesday, 17 September 2019

முகநூல் வாசி

இவன் கால்வாசி ஜனத்தொகையின் சாபக்கேடு.
தொலைபேசியின் காதலனாய்
முகநூல் பக்கத்தில் முகமில்லா
மனிதனாய் வாழத்தொடங்கிவிட்டான்..

தன்னை சுற்றிய அனைத்து
விருப்பங்களையும் கோபங்களையும்
வெறும் எழுத்துக்களாகவும் கார்ட்டூன் பொம்மைகளாகவும்
கடந்து செல்கிறான்...

இணையத்தின் வேகத்தில்
நடைபாதை பூக்களையும், ஜன்னல் ஓர பயணங்களையும்
டீக்கடை நண்பர்களையும்
சிட்டுக்குருவியாய் தொலைத்தான்...

முகநூல் பக்கத்தில்
உலகையே பார்த்தாலும் தன்னையும்
தன் கைக்குள்ளயே சிறை வைத்துக்கொள்கிறான்
இந்த முகநூல் வாசி.... 

Thursday, 12 September 2019

மாநகர அகதி

குக்கிராமத்தின் கடைசி பேருந்தில்
ஜன்னல் சீட்டை பிடித்தபடி  வருங்கால
கனவுகளுடன் சென்னை புறப்பட்டான்...

சினிமாவில் அவன்  பார்த்த சென்னை
நிஜத்தில் நெரிசலும், கோபமும்,
பயமும், பதட்டமுமாய் மட்டுமே இருந்தது..

ஐந்து ரூபா டீயும் , அளவு சாப்பாடும்
சங்கிலியால் பிணைக்கப்பட்ட
மாநகர டம்ளாரும் அவனை
பிழைக்க வந்தவன் என 
அகதியாக்கியது...

இறக்குமதி செய்யப்பட்ட காருக்கும்
கடைக்கும் செல்போனுக்கும்
இடையில்  அவன் மட்டும்

எண்ணெய் வைத்து சீவிய தலையுடன்
உள்நாட்டு உற்பத்தியாய்
தனித்து நின்றான்... 

Monday, 9 September 2019

நிறை மாத ஆண் மகன்


விதைத்த நாள் முதல்
வாங்கிய கடனுக்கு வட்டியை
கூட்டிய படி

நிறை மாத ஆண் மகனாய்
வயலுக்கு வந்தான் மாணிக்கம்

இன்று காலை மண் வெட்டியும்
தலைப்பாகையுமாய் வயலுக்கு வந்தவனை

செம்மண் விரிசல்களாய் சிறு தழையும்
தண்டுமாய் விதைத்த அத்தனையும்
விளைந்து நின்றன…

ஆனந்த கண்ணீரும், கன்னக்குழி நிறைந்த
அந்த சிரிப்பும் அவனை
ஆயிரம் பிள்ளைக்கு அப்பனாக்கியது…           

Tuesday, 3 September 2019

வாடிய பணம்

கீறல் விழுந்த கண்ணாடியும்
தையல் போட்ட செருப்பும்
பச்சை துண்டுடன்...

எட்டு மணி பஸ்ச பிடிக்க
 கீரை கட்டுடன் வந்து நின்றான்
அந்த மாநிற மனிதன்...

நாளாய் மடித்த பத்து ரூபாய் நோட்டை
 இறுக்கி பிடித்தபடி  நிற்க
இடம் இல்லாத பஸ்சில் ..

வேண்டா வெறுப்பாய் அவனை
கடந்து சென்றது அந்த பயணம்
இடம் வருவதற்குள் பாதி பணம் வாடி போச்சு..

வேற வழியும் இல்ல
ஈர துணியில் பாதி கீரைக்கும்
மீதி அவன் வயித்துக்கும்ன்னு ஆயிருச்சு. .